கோவை: கோயம்புத்தூர் வடவள்ளியைச் சேர்ந்தவர் பேராசிரியர் காமராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அதில்,"எனது மகள்கள் லதா, கீதா ஆகியோரை ஈஷா யோகா மையத்தில் அடைத்துவைத்து, துன்புறுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனது மகள்களை மீட்டுத் தரவேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு சென்னைஉயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது,லதா, கீதா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
தொடர்ந்து, "ஈஷா யோகா மையம் மீது மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று ஆய்வுசெய்து, வரும் 4-ம்தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கோவை மாவட்ட சமூகநல அலுவலர் அம்பிகா, எஸ்.பி.கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள், 6 குழுக்களாகப் பிரிந்து ஈஷா வளாகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை வரை சோதனை மற்றும் விசாரணை தொடர்ந்தது.
சிலரின் தூண்டுதலால்... ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈஷா யோகா மையத்தில் யாரையும் திருமணம் செய்யவோ, துறவறம் மேற்கொள்ளவோ கட்டாயப்படுத்துவதில்லை. இந்நிலையில், இரு பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர் கடந்த 8 வருடங்களாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவுசெய்தும், சிலரது தூண்டுதலால் போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர்.
அண்மையில் காமராஜ் ஈஷாயோக மையம் வந்து, தன் மகள்களை சந்தித்த சிசிடிவி காட்சிகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் உண்மை வெல்லும். ஈஷாவுக்கு எதிராக, தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறுஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.