கூடலூர்: முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செல்ல கேரள அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்நிலை நீடித்தால் தமிழகத்துக்கு வரும் பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் வாகனத்தை தடுத்து நிறுத்துவோம் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழக கேரள எல்லையான குமுளி தேக்கடியை தலைமையிடமாக கொண்டு பெரியாறு புலிகள் காப்பகம் கடந்த 1978ம் ஆண்டு தேசிய புலிகள் ஆணையத்தால் உருவாக்கப்பட்டது. 925 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இந்த புலிகள் காப்பகம் தமிழகத்தின் தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களோடு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இக்காப்பகம், இணை இயக்குநரால் நிர்வாகம் செய்யப்படுகிறது.
இரவங்கலாறு, கோட்டமலை, மணலாறு, மாவடி, மயிலப்பாரா, மூலவைகை, பெரியாறு, சுந்தரமலை, தாமரை, தானிக்குடி என பத்து டிவிசன்கள் தமிழகத்தோடு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதில் தானிக்குடி ரேஞ்சுக்கு செல்ல வேண்டுமானால் கேரள அதிகாரிகள் பயன்படுத்துவது முழுக்க முழுக்க தமிழக சாலையைத்தான்.
குமுளியிலிருந்து கிளம்பி ஒன்றாவது கிலோ மீட்டரிலேயே தமிழக எல்லையை அடைந்து லோயர் கேம்ப், கம்பம், சின்னமனூர், அண்ணாநகர், கடமலைக் குண்டு, குமணந்தொழு, கோரையூத்து வழியாக மேகமலை புலிகள் காப்பக எல்லையான மஞ்சனூத்து சோதனை சாவடியை தாண்டி, வெள்ளிமலை வழியாக தங்களுடைய தானிக்குடி ரேஞ்சுக்கு செல்கிறார்கள்.
கிட்டத்தட்ட 90 கிலோ மீட்டர் தூரம் இந்த பெரியாறு புலிகள் காப்பக வண்டிகள் தமிழகத்தின் வழியே தான் பயணிக்கிறது. அதே வேளையில் தமிழக அரசின் பராமரிப்பில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்ல தமிழக பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இவர்கள் பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கின்றனர். இதற்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுவிக் பாலசிங்கம் கூறுகையில், "சுந்தரமலை பகுதிக்கு தமிழகத்தின் 4 மாவட்டங்களை கடந்து இந்த அதிகாரிகளின் வாகனங்கள் பயணிக்கிறது. இதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் இவர்கள் எந்த அனுமதியும் பெறுவது இல்லை. ஆனால் 999 ஆண்டுகள் தமிழகத்தின் ஒப்பந்தத்தில் உள்ள பெரியாறு அணைக்குள் செல்வதற்கு கடந்த 10 ஆண்டுகளாக பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கடி தந்து கொண்டிருக்கின்றனர்.
கட்டுமானப் பொருட்கள், உணவுப் பொருட்களை கொண்டு செல்ல தொடர்ந்து இடையூறு இருந்து வருகிறது. தமிழகத்துக்குள் சர்வ சுதந்திரமாக பயணிக்கும் இவர்கள் நமது பராமரிப்பில் உள்ள பெரியாறு அணைக்கு தளவாடப் பொருட்களை கூட அனுமதிப்பதில்லை. தமிழக பாதையை புலிகள் காப்பக கேரள அதிகாரிகள் இனி பயன்படுத்த வேண்டும் என்றால் பெரியாறு அணைக்குச் செல்ல தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு எவ்வித நெருக்கடியும் தரக்கூடாது.
மீறினால் பெரியாறு புலிகள் காப்பக வண்டிகளை தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். தானிக்குடி ரேஞ்சுக்கு செல்லும் வண்டிகளை கடமலைகுண்டுவிலும், சுந்தரமலை ரேஞ்சுக்கு செல்லும் வண்டிகளை வாசுதேவநல்லூரில் தடுத்து நிறுத்துவோம். அடுத்தடுத்த போராட்டத்திலும் ஈடுபடுவோம்" என்று பென்னிகுவிக் பாலகிங்கம் கூறினார்.