கல்லூரி மாணவரின் பைக்கில் பதுங்கிய பாம்பு: ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே பரபரப்பு


ஶ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு இளைஞர் சென்ற பைக்கில் பாம்பு பதுங்கி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் பிரதீப் (22). கல்லூரி மாணவரான இவர், ரேஸ் பைக் வைத்துள்ளார். பிரதீப் பைக்கை தனது வீட்டின் அருகே நிறுத்தி வைப்பது வழக்கம். அதன்படி தனது பைக்கை வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த பிரதீப், இன்று காலை பைக்கை எடுத்துக் கொண்டு தளவாய்புரத்தில் இருந்து மதுரைக்கு சென்றுள்ளார். பிற்பகல் 12:30 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சென்றபோது, காலில் ஏதோ வித்தியாசமாக பட்டதால் பைக்கை நிறுத்தி பார்த்துள்ளார் பிரதீப்.

அப்போது பைக்கின் கீழ் பகுதியின் உள்ளே பாம்பு ஒன்று இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து அங்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர், பைக்கின் பாகங்களை கழற்றி உள்ளே இருந்த சுமார் 2 அடி நீளமுள்ள பாம்பை பிடித்து, வனப் பகுதியில் விட்டனர். தற்போது மழைக்காலம் என்பதால் பாம்புகள் சூடான இடங்களில் தஞ்சம் அடைவது இயல்பு. பைக் இன்ஜின் பகுதி சூடாக இருப்பதால் பாம்புகள் பைக்கில் புகுந்து கொள்ளும்.

அப்படித்தான் பிரதீப்பின் பைக்கில் அந்தப் பாம்பு பதுங்கியுள்ளது. ஆகவே, வீடுகளுக்கு அருகேயும், சாலையோரங்களிலும் பைக்கை நிறுத்துபவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். ரேஸ் பைக்குகளில் பாம்புகள் இருந்தால் எளிதில் தெரியாது. இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

x