கோவை: வீடு, அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்வயர், மின்சுற்றுகளை அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரீசியன்களை கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் என, மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மின்நுகர்வோர் தங்களின் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்படும் மின்விபத்துக்களை தவிர்க்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
மின்இணைப்பில் வயர்கள் மற்றும் மின் சுற்றுகளை அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரீசியன்களை கொண்டு முறையாக ஆய்வு செய்து பழுதடைந்த வயர்களை புதுப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும் பழுது கண்டறியப்பட்டால் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை யாரும் தொடவும், மிதிக்காத வகையிலும் பார்த்துக்கொள்ள வேண்டும். திறந்த நிலையில் உள்ள மின்பெட்டிகள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.