திருச்சி, திண்டுக்கல், பழநி வழியாக விரைவில் மயிலாடுதுறை - பாலக்காடு நேரடி ரயில் சேவை


தஞ்சாவூர்: மயிலாடுதுறை- பழநி- பொள்ளாச்சி- பாலக்காடு இடையே விரைவில் நேரடி ரயில் சேவை தொடங்க தெற்கு ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக பழநியை இணைக்கும் வகையில் நேரடி ரயில் இயக்க பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

மயிலாடுதுறை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராமலிங்கம், தஞ்சாவூர் எம்.பி. முரசொலிஆகியோர் தஞ்சாவூர்- பாலக்காடு இடையே புதிய ரயில் இயக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதேபோல, பழநி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதி பயணிகள், டெல்டா பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வர வசதியாக கும்பகோணம் வழியாக நேரடி ரயில் இயக்க வேண்டும் என கோவை மேற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கோரிக்கைவிடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை- பாலக்காடு இடையே நேரடி ரயில் இயக்க முதல் கட்ட நடவடிக்கையை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி, மதுரைமற்றும் சேலம் கோட்ட மெக்கானிக்கல் பிரிவுக்கு தெற்கு ரயில்வேநிர்வாகம் அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில், மயிலாடுதுறை- தஞ்சாவூர் ரயிலை திருச்சி, திண்டுக்கல், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு டவுன்வரை நீடித்து இயக்க உத்தேசகால அட்டவணை வெளியிட்டுஅதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து இசைவு தெரிவிக்க கோரப்பட்டுள்ளது.

இதற்கு ரயில்வே வாரியம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் பாபநாசம் டி.சரவணன் கூறியதாவது:

மயிலாடுதுறை- பாலக்காடு டவுன் இடையே நேரடி ரயில் இயக்கப்பட்டால் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து முதன்முறையாக பழநிக்கு நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும். இதன் மூலம் 6 மாவட்ட பயணிகள் நேரடி ரயில் வசதி பெறுவர்.

மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதி பயணிகளுக்கு முதன்முறையாக கேரள மாநிலத்துக்கு நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும். மேலும், பாலக்காட்டில் இருந்து குருவாயூர், திருவனந்தபுரம் பகுதிகளுக்கு செல்லக்கூடிய அம்ருதா எக்ஸ்பிரஸ் (16344) போன்ற வண்டிகளுக்கு இணைப்பு கிடைக்கும்.

நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து விழாக்கள் வர உள்ள நிலையில், இந்த ரயிலை விரைந்துஇயக்க வேண்டும் என்பதே டெல்டா மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளதுஎன்றார்.

x