செந்தில் பாலாஜி மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு தமிழக அரசு மாற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 15 மாத சிறை தண்டனை அனுபவித்தது தான் செந்தில் பாலாஜி செய்த தியாகம் என்று அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்திருக்கிறார்.
பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்த ஒருவரை ஒரு மாநிலத்தின் முதல்வர் இந்த அளவுக்கு இறங்கிச் சென்று பாதுகாக்க முயல்வதும், போற்றுவதும் ஏற்றுக் கொள்ளவே முடியாதது.

செந்தில்பாலாஜி மீதான வழக்கு முடிவடைய நீண்டகாலம் ஆகும். அதுவரை அவரை சிறையில் வைத்திருக்க முடியாது என்பதால்தான் உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அதன் பொருள் விடுதலைஇல்லை. அதனால் அந்த சிறை வாசம் தியாகமும் இல்லை.

1,630 பணிகளுக்கு ஆள்சேர்ப்பு: 2014-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 1,630 பணிகளுக்கு ஆள் சேர்க்க செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கிக் குவித்ததாக காவல்துறை வழக்குத் தொடர்ந்திருக்கிறது. அவர் ஊழல்கள் குறித்து குளித்தலை கூட்டத்தில் ஸ்டாலின் பாடலே பாடினார். முதல்வர் என்பவர் பொதுவானவர். நடுநிலை தவறாத நீதிபதியாக இருந்து நீதி வழங்க வேண்டியவர், தனது கடமையை மறந்துவிட்டு மோசடி செய்தவருக்கு வழக்கறிஞராக மாறி வாதாடிக் கொண்டிருக்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

இந்த பின்னணியில் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை தமிழகத்தில் நியாயமாக நடக்கும் என தோன்றவில்லை.
எனவே, விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றும்படி உச்ச நீதிமன்றத்துக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண் டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x