சென்னை: விமான சாகச நிகழ்ச்சியையொட்டி இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை மெரினாவில் ட்டேரான்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் பிறப்பித்த உத்தரவு: இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டை நிறைவு செய்யும் வகையில் சென்னையில் அக்டோபர் 6-ம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், விமானப்படையின் பல்வேறு வகைகளைச் சேர்ந்த 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபட உள்ளன.
ஆண்டு தோறும் டெல்லியில் மட்டுமே இந்த சாகச நிகழ்ச்சி நடந்து வந்தது. பின்னர் சண்டிகர் மற்றும் உத்திரபிரதேசத்திலும் நடைபெற்றது. தற்போது சென்னையிலும் நடைபெற உள்ளது. மெரினா கடற்கரையில் இருந்து பொது மக்கள் அனைவரும் இந்த விமான சாகச நிகழ்ச்சியை இலவசமாக கண்டு களிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசு, ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். விமான சாகசத்துக்கான ஒத்திகைகள் இன்று (1-ம் தேதி) முதல் 5-ம் தேதி வரை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்றுமுதல் செப்.6 வரை மெரினா கடற்கரை பகுதி (அரசு ஏற்பாடுகள் தவிர) சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (RED ZONE), அந்த பகுதிகளில் தொலைதூர பைலட் விமான அமைப்புகள், ட்ரோன்கள் மற்றும் எந்த விதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது.