மழைநீர் வடிகால் பணியிடங்களில் தடுப்புகளை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்


சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் துறைமுகம் தொகுதியில் ரூ.6 கோடியில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ், பல்நோக்குக் கட்டிடம், நவீன பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பல்வேறு தெருக்களுக்கு பெயர்ப் பலகைகள் அமைத்தல் உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ராயபுரம் மண்டலம் பேரக்ஸ் சாலையில் நேற்று நடைபெற்றது.

மேயர் ஆர்.பிரியா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று பணிகளைத் தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: துறைமுகம் தொகுதியில் ரூ.6 கோடியில் 17 திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு முடிவுக்கு வரும். முதல்வர் ஸ்டாலின் அறிவித்த வட சென்னை வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை அசோக் நகர் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணியிடத்தில் ஒருவர் விழுந்து இறந்தது வருத்தத்துக்குரியது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகரப் பகுதியில் நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் உரிய பாதுகாப்பு தடுப்புகளை ஏற்படுத்தி பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

x