கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மகளிர் குழுவினருக்கு ரூ.92,000 கோடி கடன்: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்


சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 516 சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.30.20 கோடி வங்கிக் கடன் இணைப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.92 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான மணிமேகலை விருதுகள், வங்கியாளர் விருதுகள், சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் செயலர் ககன்தீப்சிங் பேடி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விழாவுக்கு தலைமை தாங்கினார்.

கடந்த 2 ஆண்டுகளில் சிறப்பாக செயலாற்றிய 70 சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டாட்சி அமைப்புகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலான காசோலை மற்றும் மணிமேகலை விருதுகளையும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்ககத்தின் கீழ் செயல்படும் 516 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 6,135 பேருக்கு ரூ.30.20 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புகளையும் சிறந்தமுறையில் வங்கி கடன் இணைப்புகளை வழங்கி ஊக்குவிக்கும் 13வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகளையும் உதயநிதி வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: துணை முதல்வர் என்ற மாபெரும்பொறுப்பை ஏற்ற பின்பு, என்னுடைய தாய்மார்கள், சகோதரிகளை சந்திக்க வந்திருக்கிறேன். தமிழகத்தில் ஊரக வாழ்வாதார இயக்ககம், நகர்ப்புற வாழ்வாதார இயக்ககங்களின் கீழ் 4.73 லட்சம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 14.91 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட 1.25 லட்சம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான வங்கிக் கடன் இணைப்பு இலக்காக ரூ.35 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.84,815 கோடி மட்டுமே வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் திமுக பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் ரூ.92 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட 10 ஆண்டுகால கடன் இணைப்பைவிட அதிகமாக திமுக அரசு 3 ஆண்டுகளில் வழங்கி இருக்கிறது. அந்தவகையில் இந்தியாவிலேயே மகளிர் மேம்பாட்டுக்கு எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்ஷினி, செயல் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங், மாநில வங்கியாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

x