‘பூர்விகமாக வசித்ததற்கு பட்டியலினத்தவரிடம் ஆதாரம் கேட்பதால் புதுச்சேரியில் இளையோர் படிப்பதில் பாதிப்பு’


புதுச்சேரி: பூர்விகமாக புதுச்சேரியில் வசித்தற்கு பட்டியல் இனத்தவரிடம் ஆதாரத்தை அரசு தரப்பில் கேட்பதால் இளையோர் படிப்பதில் பாதிப்பு ஏற்படுவதால், புகார் தெரிவிக்க சட்டப்பேரவைக்கு இன்று மக்கள் வந்தனர். அவர்களை அனுமதிக்காமல் கதவை மூடியதால் தவித்தனர். இறுதியில் பேரவை துணைத் தலைவர் அவர்களிடம் மனு பெற்று முதல்வரிடம் பேசுவதாக தெரிவித்தார். மக்கள் கடுமையாக அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நெட்டப்பாக்கம் தொகுதியிலிருந்து ஏராளமான பட்டியல் இன மக்கள் முதல்வர் ரங்கசாமியை சந்திக்க வந்தனர். ஏராளமானோர் வந்ததால் அவர்களை சட்டப்பேரவைக்குள் சபை காவலர்கள் அனுமதிக்கவில்லை. தாங்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க அனுமதிக்குமாறு கூறிய நிலையில் பேரவை கதவுகள் மூடப்பட்டன. பெரியக்கடை போலீஸார் அங்கு வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்காததால் தங்கள் குறைகளை அவர்கள் எழுப்பினர்.

போலீஸாரிடம் அவர்கள் கூறுகையில், "புதுச்சேரியில் பூர்விகமாக பட்டியலின மக்கள் 1964ம் ஆண்டுக்கு முன்பு எங்கள் தாத்தா, பாட்டி வசித்த ஆவணங்கள் கேட்கிறார்கள். இந்த ஆதாரம் முந்தைய தலைமையில் படிக்காத தங்கள் குடும்பங்களில் இல்லை. தற்போது தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கிறோம். குழந்தைகள் படிக்க இலவச கல்வி இருந்தும் அதை பெற, அதற்கும் ஆதாரம் தேவைப்படுகிறது. ஆதாரம் இல்லாவிட்டால் எதுவும் கிடைப்பதில்லை. வாக்குகாக மட்டும் ஊருக்குள் வருகிறீர்கள். தற்போது விரட்டுகிறீர்கள்" என்றனர்.

தொடர்ந்து கேள்வி எழுப்பினர். அதையடுத்து சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு சட்டப்பேரவை வெளியே வந்து அவர்களிடம் வந்து பேசுகையில், "இப்பிரச்சினையில் நெட்டபாக்கத்துக்கு மட்டும் முடிவு எடுக்க இயலாது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என அனைத்து பிராந்தியங்களிலும் இப்பிரச்சினை உள்ளது. படிப்பதற்கு நிரந்தர சான்று கேட்கிறீர்கள். இவ்விஷயம் தொடர்பாக முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்." என்றார்.

இதையடுத்து முதல்வருக்கு தர வேண்டிய மனுக்களை அவர் பேரவையின் வெளியிலேயே வாங்கிக்கொண்டு சென்றார். அதைத் தொடர்ந்து அருகேயுள்ள எம்பி வைத்திலிங்கம் வந்து அவர்களை அழைத்து பேசினார்.

இதுதொடர்பாக விசாரித்தபோது, "புதுச்சேரியில் பட்டியின மக்கள் உள்ளூர் வாசிகள், வெளியூர் வாசிகள் என இரண்டாக பிரித்துள்ளனர். வெளியூரில் இருந்து வந்தோருக்கு இடஒதுக்கீடு இல்லை என அரசு தரப்பில் நிலைப்பாடு எடுத்துள்ளனர். புதுச்சேரியில் பூர்விக பட்டியலின மக்களாக இருப்போர் கடந்த 1964ம் ஆண்டுக்கு முன்பாக வசித்த ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும். ஆதாரம் இல்லாவிட்டால் இம்மக்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. 2014ல் உச்சநீதிமன்றமானது இது சட்டவிரோதம் என உத்தரவுகளை ரத்து செய்தது. அதன் பிறகும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு நடைமுறைக்கு வரவில்லை." என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

x