துணை முதல்வரான உதயநிதி: உதகை நகராட்சியில் கேக் வெட்டி கொண்டாட்டம்


உதகை: உதகை நகராட்சி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றதை கவுன்சிலர்கள் கேக் வேட்டி கொண்டாடினர்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி கூட்டம் தலைவர் எம்.வாணீஸ்வரி இன்று தலைமையில் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் துணை தலைவர் ஜே.ரவிகுமார், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அதை கொண்டாடும் வகையில் கூட்டத்தில் கேக் வரவழைக்கப்பட்டு, தலைவர், துணை தலைவர், நகராட்சி ஆணையர் ஜஹங்கீர் பாஷா மற்றும் கவுன்சிலர்கள் கேக் வேட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு கேக் வழங்கினர். பின்னர், கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். இந்நிலையில், உதகை நகராட்சிக்கு உட்பட்ட மார்லிமந்து பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 45 ஏக்கர் விவசாய நிலத்தை 3 ஆண்டுகளுக்கு ரூ.10 லட்சத்துக்கு குத்தகை விட நகராட்சி சார்பில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் எதிர்த்து தெரிவித்தனர். இதேபோல நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.700 வீதம் வாடகை நிர்ணயம் செய்து வசூலிக்க மன்ற ஒப்புதலுக்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானமும் கவுன்சிலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு பாலகமும் ஒவ்வொரு அளவில் உள்ளதால், சதுர அடிக்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என கவுன்சிலர் ஹக்கீம் பாபு தெரிவித்தார். இதற்கு கவுன்சிலர் ஜார்ஜ் எதிர்ப்பு தெரிவித்தார். பல ஆவின் பாலகங்கள் ஆக்கரிமிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதால், அதற்கு வாடகை நிர்ணயம் செய்தால் நகராட்சி ஒப்பதல் அளித்ததுபோல ஆகி விடும் என்றார். இதனால், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

துணை தலைவர் ரவிகுமார், மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்றார். மேலும், அவர் பேசும் போது, ’தற்போது இரவு நேரங்களில் கனமழை பெய்கிறது. இதை எதிர்கொள்ள நகராட்சி நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும். ஜான் சல்லீவன் பூங்காவை பராமரிக்க வேண்டும். இதை பராமரிக்க அமைப்பு முன் வந்துள்ளது. அவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

டேவீஸ் பூங்கா நகராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் ரூ.1 கோடியில் புனரமைக்கப்பட்டது. ஆனால், தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இந்நிலையில், தற்போது அரசு சார்பில் 5 ஆண்டுகளுக்கு நகராட்சியில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்த திட்ட அறிக்கையை அரசு கோரியுள்ளது. மக்களுக்கு பயன்பட கூடிய திட்டங்களை பரிந்துரைக்க வேண்டும்’ என்றார்.

x