மதுரை- பெங்களூர் வந்தே பாரத் ரயிலில் பயணிகள் அதிகரிக்க நேர மாற்றம் தேவை: தென்னக ரயில் பயணிகள் சங்கம்


மதுரை: மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என தென்னக ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தென்னக ரயில்வே பயணிகள் சங்க பொதுச்செயலாளர் பத்மநாதன், மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்திடம் கொடுத்த மனு ஒன்றில் கூறியிருப்பதாவது: "மதுரை - பெங்களூருக்கு திருச்சி, கரூர் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மதுரையில் அதிகாலை 5.15 மணிக்கு புறப்படுகிறது. பெங்களூருக்கு மதியம் 1 மணிக்கு சென்று சேர்கிறது. 586 கிலோ மீட்டர் பயணிக்கும் இந்த ரயிலில் தற்போது, 62 சதவீத பயணிகள் மட்டும் பயணிப்பதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

குறைந்த பட்சம் 90 சதவீதம் பேர் பயணிக்க வேண்டும் என எதிர்பார்ப்பும் உள்ளது. இச்சூழலில் காலை 5.15 மணிக்கு மதுரையில் புறப்படும் நேரத்தை மாற்றி 6 மணிக்கு புறப்படும் வகையில் செய்ய வேண்டும். இந்த 1 மணி நேரத்தில் மதுரை சுற்றியுள்ள பயணிகள் பயன்படுத்தும் நிலையால் கூடுதல் நபர்கள் பயணிக்க முடியும், பயணிகளும் அதிகரிப்பர்.

இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கம், சேலம், ஜோலார்பேட்டை, கிருஷ்ண ராஜபுரம் வழியாக செல்கிறது என்றாலும், தினமும் செல்கிறது என்பது பலருக்கும் தெரியவில்லை. இது மக்களிடம் கொண்டு போய் நிர்வாகம் சேர்க்க வேண்டும். மதுரையில் இருந்து 6 மணிக்கு புறப்படுவதன் மூலம் மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயிலை 100 சதவீத பயணிகள் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

x