பழனி கோயில் நிர்வாகத்தை கண்டித்து தேவஸ்தான அலுவலகம் முன்பு பழனி நகராட்சி உறுப்பினர்கள் 33 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகப்பெருமானின் மூன்றாவது படை வீடான பழனி கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. பழனி மலை அடிவார கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக கூறி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து கிரிவலப் பாதைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு எவ்விதமான வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை.
இதனால் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நகராட்சி சார்பில் புதியதாக சாலை வசதிகள் மற்றும் குடிநீர் குழாய்கள், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இதனிடையே பழனி தேவஸ்தானம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, வேறு சில சாலைகளையும் பராமரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பழனி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் பழனி மலை அடிவாரத்தில் உள்ள தேவஸ்தான அலுவலகம் முன்பு பழனி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில், இன்று 33 கவுன்சிலர்களும் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு வசதி செய்து கொடுப்பதாக கூறிவிட்டு பாதையை அடைத்ததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளதாக அப்போது அவர்கள் குற்றம் சாட்டினர். நகரில் உள்ள மக்கள், விழாக்கள் இல்லாத சமயங்களில் கூட அந்த சாலை வழியே செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.