கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்களை வைத்து மிரட்டி, எழுதி வாங்கியதாக புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் மற்றும் சிலர் என 7 பேர் மீது வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த நில மோசடி வழக்கை, கடந்த சில நாள்களாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த வழக்கில் போலீஸார் தன்னை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என கருதிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு, தள்ளுபடியானது.
இதைத் தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார். அவரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து மீண்டும் முன்ஜாமீன் கேட்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளி வர உள்ளது.
இச்சூழலில் கரூரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடையவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று காலை சிபிசிஐடி போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். கரூர் அருகே மணல்மேடு பகுதியில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த ஊழியர் ஒருவரின் வீடு, கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள செல்வராஜ் என்பவர் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை காரணமாக கரூர் மாவட்ட அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.