புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் இந்தி திணிப்பு; போராட்டம் அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!


எடப்பாடி பழனிசாமி

புதிய குற்றவியல் திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தித் திணிக்கப்படுவதை எதிர்த்தும், இந்த திருத்தச் சட்டங்கள் தொடர்பாக திமுகவின் இரட்டை வேடத்தை கண்டித்தும் அதிமுக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய பாஜக அரசால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, 1.7.2024 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நீக்கக் கோரியும், மேற்படி 3 புதிய சட்டங்களுக்கு சமஸ்கிருதம் கலந்த இந்தியில் பெயர் வைத்து அப்பட்டமான இந்தித் திணிப்பு செய்துள்ளதைக் கண்டித்தும், அச்சட்டங்களுக்கு மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரியும், மேலும் திருத்தச் சட்டங்கள் தொடர்பாக திமுக-வின் இரட்டை வேடத்தை பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் நாளை (5.7.2024) நண்பகல் 12 மணிக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பாக, கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை தலைமையில் அறவழியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக வழக்கறிஞர் நிர்வாகிகளும், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளவேண்டும்’ என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்

x