முதல்வர் ஸ்டாலினின் பெயர் தமிழக வரலாற்றில் கருப்பு மையால் எழுதப்படும் - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!


அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. ஒருவேளை அதில் தமிழகத்துக்கு எதிரான தீர்ப்பு வந்தால், முதல்வர் ஸ்டாலினின் பெயர் தமிழக வரலாற்றில் கருப்பு மையால் எழுதப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்

விக்கிரவாண்டியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், “திமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் விக்கிரவாண்டியில் சூழ்ந்து மக்களுக்கு பணத்தை இறைத்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான திமுகவினர் விக்கிரவாண்டியில் எல்லா ஊர்களையும் ஆக்கிரமித்துள்ளனர். நாங்கள் பிரச்சாரம் செய்யப்போகும் இடத்திற்கெல்லாம் , முன்பே சென்று 2000 ரூபாய் பணம் கொடுத்து மக்களை பட்டியில் அடைத்து விடுகிறார்கள்.

இதுபோலெல்லாம் செய்வதற்கு விக்கிரவாண்டியில் தேர்தலே நடத்தத் தேவையில்லை. இது ஒரு தேர்தலா? இப்படித்தான் ஜெயிக்க வேண்டுமா? இதற்கு தேர்தலே தேவையில்லை. திமுக வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு போகலாம். குழந்தைகளை கடத்தி வைத்து ஓட்டு போட்டால்தான் விடுவோம் என திமுகவினர் மிரட்டக்கூட செய்வார்கள். திருமங்கலம், ஈரோடை தொடர்ந்து இது விக்கிரவாண்டி ஃபார்முலா இப்படித்தான் இருக்கும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ஆனால், இத்தனையையும் மீறி நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். விக்கிரவாண்டி தொகுதியில் ஒரு வளர்ச்சியும் இல்லை. ஜெயலலிதா புகைப்படத்தை நாங்கள் பயன்படுத்த கூடாதென்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. திமுக நிர்வாகிகளால் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேட்டி, சட்டை, சேலை உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் முன்னிலையில் பாமகவினர் கைப்பற்றி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வேட்டி சேலைகளை திமுகவினர் கொல்லைப்புறம் வழியாக எடுத்துச் செல்ல உதவி செய்தனர். இன்று மீண்டும் அவை வீடு வீடாக விநியோகம் செய்யப்படுகிறது” என்றார்

அன்புமணி ராமதாஸ்

தொடர்ந்து பேசிய அவர், “சமூக நீதி குறித்து எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம். சமூக நீதிக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாததால் தமிழகத்தில் இப்போது 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது. மராத்தா இடஒதுக்கீட்டு வழக்குக்கு பிறகு தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. ஒருவேளை அதில் தமிழகத்துக்கு எதிரான தீர்ப்பு வந்தால், அது நமக்கு மிகப்பெரிய ஆபத்து. அவ்வாறு நடந்தால் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பெயர் தமிழக சமூக நீதி வரலாற்றில் கருப்பு மையால் எழுதப்படும். இதை தவிர்க்க வேண்டுமானால் உடனே தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால் இதை தட்டிக்கழிக்க பார்க்கிறது திமுக அரசு. ஏற்கெனவே பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. அப்படியிருக்கையில் தமிழகத்தில் ஏன் நடத்த முடியாது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

x