ஹரியாணா மற்றும் டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. ஆனால், பஞ்சாபில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன.
இந்நிலையில் டெல்லிக்கு வரும் 2025ம் ஆண்டும், ஹரியாணாவில் இந்த ஆண்டு இறுதியிலும் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இச்சூழலில் இந்த இரு தேர்தல்களிலும் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் தனித்தனியாக போட்டியிடும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இன்று அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், "மாநிலத் தேர்தல்களுக்கு இந்தியா கூட்டணி பின்பற்றும் வியூகம் எதுவும் இல்லை.
காங்கிரஸ் தலைவர்களும், மற்ற கூட்டணிக் கட்சிகளும் உடன்படும் மாநிலங்களில் இந்தியா கூட்டணி இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும்" என்றார்.
இதைத் தொடர்ந்து வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் இந்தியா கூட்டணி, இணைந்து தேர்தலை எதிர்கொள்ளுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெய்ராம் ரமேஷ், “ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி இணைந்து போட்டியிடும்.
ஆனால், பஞ்சாபில் இந்தியா கூட்டணி இல்லை. ஹரியாணாவில் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஓர் இடம் கொடுத்தோம். ஆனால், சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி இருக்கும் என நான் நினைக்கவில்லை. டெல்லியில் இந்தியா கூட்டணி சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இருக்காது என ஆம் ஆத்மி கட்சியே கூறியுள்ளது” என்றார்.