ஆந்திரப் பிரதேசத்திற்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லியில் இன்று பிரதமர் மோடியை ஆந்திரா முதல்வர் சந்திபாபு நாயுடு நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். பிரதமரிடம் ஆந்திரா மாநிலத்திற்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார் என தகவல் வெளியாகி உள்ளது.
இன்று பிரதமரைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திரத்தில் நிலவும் நிதிநெருக்கடியைச் சமாளிப்பதற்காக, வரிச்சலுகை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம், ஆந்திரத்தின் நிதிநெருக்கடி கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. பிரதமரைச் சந்தித்த பின்னர், மத்திய அமைச்சர்களான பியூஷ் கோயல் மற்றும் நிதின் கட்கரியையும் அவர் சந்தித்துள்ளார். நாளை சந்திரபாபு நாயுடு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேச உள்ளார்.
தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய தலைவராக சந்திரபாபு நாயுடு இருக்கிறார். மத்திய பாஜக ஆட்சிக்கு தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவும் மிக இன்றியமையாததாக மாறியுள்ளது. எனவே சந்திரபாயு நாயுடுவின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது என அக்கட்சி நம்புகிறது. ஆனால் ஆந்திராவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கினால் நிதிஷ் குமார் முதல்வராக உள்ள பீகார் மற்றும் பாஜக புதிதாக ஆட்சியமைத்துள்ள ஒடிசாவுக்கும் அதேபோன்ற சலுகைகள் வழங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பிரதமரை சந்தித்தது குறித்து சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ இன்று, நான் பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திரப் பிரதேசத்தின் நலன் மற்றும் மேம்பாடு தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க டெல்லியில் சந்தித்தேன். அவருடைய தலைமையில் நமது மாநிலம் மீண்டும் மாநிலங்களுக்கான அதிகார மையமாக உருவாகும் என்று நான் நம்புகிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்