உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி அளித்த விருந்து!


பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

டி 20 ஓவர் உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர்களைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்தளித்தார்.

பார்படாசில் நடைபெற்ற டி 20ர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதனைத் தொடர்ந்து வெற்றிக் கோப்பையுடன் இந்திய அணி இன்று டெல்லி திரும்பியது.

இந்தியா திரும்பிய வீரர்கள்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு அணியின் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் வீரர்கள் சென்றனர். அவர்களுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டும் உடன் சென்றிருந்தார். அவர் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்களுடன் மோடி கலந்துரையாடினார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது இந்திய வீரர்கள் பிரத்யேக ஜெர்சி அணிந்திருந்தனர். இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்தளித்தார். அவரும் இந்திய வீரர்களுடன் அமர்ந்து ஒன்றாக விருந்து உண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் இந்திய வீரர்கள் மீண்டும் பேருந்து மூலம் நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இன்று மாலை மாலை 5 மணிக்கு மும்பை செல்லும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக சென்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

x