சேலம், தாதகாப்பட்டி பகுதியில் அதிமுக பிரமுகர் நேற்று நள்ளிரவு, மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம், கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளராக இருந்து வந்தவர் சண்முகம் (54). இவர் நேற்று இரவு தாதகாபட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சண்முகத்தை வழிமறித்த மர்ம நபர்கள் திடீரென அவரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த சண்முகத்தின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதேபோல் போலீஸாரும் அங்கு விரைந்து வந்தனர். அப்போது சண்முகத்தை கொலை செய்தவர்களைக் கண்டறிந்து கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள், அதிமுக நிர்வாகிகள் நள்ளிரவில் சடலத்தை எடுக்கவிடாமல் போராட்டம் நடத்தினர்.
அதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட சண்முகம், 2011-16-ம் ஆண்டு வரை சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார்.
இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் செய்து வந்தார். அவரது கொலைக்கு தொழில் போட்டி காரணமா அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் அதிமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.