கள்ளக்குறிச்சியை கலக்கிய கள்ளச்சாராய வியாபாரிகள்... 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!


குண்டர் சட்டத்தில் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்று வந்த 5 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், விரியூர் கிராமத்தைச் சேர்ந்த இருதயராஜ் மே மாதம் 19-ம் தேதி சாராயம் விற்றபோது சங்கராபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அதேபோல், பழனிசாமி என்பவர் ஜூன் 10-ம் தேதி சாராயம் விற்றபோது சின்னசேலம் போலீஸாரால் கைது செய்தனர். இருவரிடமிருந்து 285 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளச்சாராயம்

கடந்த மே 30-ம் தேதி புதுச்சேரியில் போலியாக மதுபானம் தயாரித்து, அதில் தமிழ்நாடு அரசு முத்திரையிட்டு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த அண்ணாதுரை, சக்திவேல், குமார் (எ) சொட்டை குமார் ஆகிய மூன்று பேரை உளுந்துார்பேட்டை மதுவிலக்கு பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 4,700 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த 5 பேர் மீது, கள்ளச்சாராயம் கடத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே, அவர்களின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி பரிந்துரையின் பேரில் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இதையடுத்து கடலுார் மத்திய சிறையில் உள்ள 5 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல்கள் வழங்கப்பட்டன.

x