தமிழக அரசியலில் பரபரப்பு; கோவை மேயரை தொடர்ந்து நெல்லை திமுக மேயர் சரவணனும் ராஜினாமா!


சரவணன்

கோவை மேயரை தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் பி.எம்.சரவணனும் ராஜினாமா செய்துள்ளார். அடுத்தடுத்து இரு திமுக மேயர்கள் பதவி விலகியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். சரவணன் மேயரானதில் இருந்து அவருக்கும் முன்னாள் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ ஆதரவு கவுன்சிலர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. சரவணனுக்கு எதிரான கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக மாநகராட்சி கூட்டங்களில் அவருக்கு எதிராக குடைச்சல் கொடுத்து வந்தனர். ஆனால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கானுடன் இணைந்து சரவணன் செயல்பட்டு வந்தார்.

சரவணன்

மேயர் அனைத்து வார்டுகளையும் சமமாக கருதாமல் தனக்கு வேண்டப்பட்ட வார்டுகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவதாகவும், மாநகராட்சி திட்டப் பணிகளில் முறைகேடு செய்வதாகவும் திமுக கவுன்சிலர்கள் பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி திமுக கவுன்சிலர்கள் 38 பேர் கையெழுத்திட்டு மாநகராட்சி ஆணையர் தாக்கரேவிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி கடிதம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் மேலிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனால் சரவணனின் மேயர் பதவி தப்பியது. ஆனாலும் நீறுபூத்த நெருப்பாக இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருந்தது.

இந்த சூழலில் மேயர் பதவியிலிருந்து சரவணன் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவுக்கு அவர் அனுப்பியுள்ளார். திருநெல்வேலி மாநகராட்சியில் நிலவிய பிரச்சினைக்கு முடிவுகட்ட மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இரு தரப்பினரிடமும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சினை தீரவில்லை.

மேயர் சரவணன் மீது தலைமைக்கு வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தினார். அவர் கொடுத்த அறிக்கையை தொடர்ந்து கட்சி தலைமை அறிவுறுத்தலின்படி சரவணன் மேயர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

x