பிரேக் ஃபெயிலியர்... ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்த அமர்நாத் யாத்ரீகர்கள்: அதிர்ச்சி வீடியோ!


பிரேக் பிடிக்காத பேருந்தில் இருந்து குதிக்கும் யாத்ரீகர்கள்

பேருந்தில் பிரேக் பிடிக்காததால் அமர்நாத் யாத்ரீகர்கள் பேருந்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ராம்பன் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரை சென்று திரும்பிய பக்தர்கள் சிலர் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து காயம் அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பனிஹாலின் நச்லானா அருகே பேருந்தின் பிரேக் பழுதானதால் ஓட்டுநரால் பேருந்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடும் பேருந்தில் இருந்து குதித்தனர். இதில் அவர்கள் காயமடைந்தனர். இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரேக் பிடிக்காத பேருந்தில் இருந்து குதிக்கும் யாத்ரீகர்கள்

ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்தச் சம்பவம், பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் நோக்கிச் செல்லும் பேருந்தில் பதினேழு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 45 பயணிகள் பயணம் செய்தனர். ஆனால், திடீரென பேருந்து பிரேக் பழுதானது. இதனால் ஓட்டுநரால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பிரேக் பிடிக்காத பேருந்தில் இருந்து குதிக்கும் யாத்ரீகர்கள்

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். அத்துடன் 3 பெண்கள், ஒரு குழந்தை உட்பட பலர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பேருந்தில் இருந்து குதித்து காயமடைந்துள்ளனர்.

அந்த வீடியோவில், சாலையில் செல்லும் பேருந்தில் இருந்து பயணிகள் கீழே குதிக்கும் காட்சியும், கீழே விழுந்த பயணிகள் சிலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பேருந்தின் பின்னால் ஓடுவதையும் காண முடிந்தது. இது தொடர்பாக போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ராணுவத்தினருடன் இணைந்து வந்து துரித நடவடிக்கையில் இறங்கினர்.

அருகில் உள்ள ஓடைக்குள் பேருந்து கவிழாமல் இருக்க ராணுவவீரர்கள் பேருந்தின் சக்கரங்களுக்கு அடியில் கற்களை வைத்துள்ளனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸுடன் ராணுவக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் முதலுதவி அளித்தனர்.

இந்த ஆண்டு ஜூன் மாதம், ஷிவ்கோரி கோயிலில் இருந்து மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு திரும்பிய பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதன் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x