லால்குடி அருகே சோகம்: ஏறுவதற்குள் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்; பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவி!


அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவி விபிக்ஷா

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரசுப் பேருந்தில் பள்ளி மாணவி ஏறுவதற்குள் பேருந்து இயக்கப்பட்டதால் தவறி விழுந்து மாணவி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வால்ராம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மரிய அலெக்ஸ் என்பவரது மகள் விபிக்ஷா அப்பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

உயிரிழப்பு

இந்நிலையில் விபிக்ஷா பள்ளிக்கு சென்றபோது, அரசுப் பேருந்தில் ஏறியபோது, பேருந்து ஓட்டுநர் அதனை கவனிக்காமல் வேகமாகப் பேருந்தை இயக்கினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவி விபிக்ஷா படுகாயமடைந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள், மாணவியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கல்லக்குடி போலீஸார் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கல்லக்குடி போலீஸார் அரசுப் பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். பள்ளிக்கு சென்றபோது, பேருந்தில் ஏற முயன்று மாணவி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் லால்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x