கோயில் முன்பு பூசாரி வெட்டிக் கொலை... மதுரையில் பரபரப்பு!


இடத்தகராறு காரணமாக கோயில் முன்பு பூசாரி வெட்டிக்கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செக்கானூரணியை அடுத்துள்ள சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவர் அந்த ஊரில் உள்ள அங்காள ஈஸ்வரி கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். அப்பகுதியில் உள்ள முருகன் என்பவருக்குச் சொந்தமான 40 சென்ட் இடம் இந்த கோயிலின் அருகே உள்ளது. இதில் 10 சென்ட் இடம் கோயில் இடத்தில் உள்ளதால், அது கோயிலுக்குச் சொந்தம் என பவுன்ராஜ்க்கும், முருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

உசிலம்பட்டி

இந்த நிலையில் நேற்று இரவு கோயிலில் உள்ள விளக்குகளை ஏற்ற இருசக்கர வாகனத்தில் பூசாரி பவுன்ராஜ் வந்தார். அப்போது அவரை கோயில் முன்பு மறித்த முருகன், இடப்பிரச்சினை தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இடப்பிரச்சினையை நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு பூசாரி பவுன்ராஜ் தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூசாரி பவுன்ராஜை சரமாரியாக முருகன் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பவுன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த செக்கனூரணி காவல் துறையின விரைந்து வந்து பவுன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பூசாரியை கொலை செய்த முருகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் முன்பு பூசாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x