ராகுல் காந்தி பேசியதை மக்கள் 100 ஆண்டுகள் ஆனாலும் மறக்க மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை ராகுல் காந்தி புண்படுத்திவிட்டார். இந்து மதத்தின் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த சதி நடைபெறுகிறது என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
மக்களவையில் பிரதமர் மோடி இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசினார். அப்போது, “நேற்று மக்களவையில் சிறுபிள்ளைத்தனமான சேட்டையை நாம் பார்த்தோம், பள்ளி மாணவர் பிறரை குற்றம் சாட்டுவது போல பேசினார்கள். குறைந்தபட்ச ஆதார விலை, அக்னி வீர் திட்டம் குறித்து ராகுல் பொய்யான தகவல் கூறினார். நாட்டு மக்களை காங்கிரஸ் கட்சி தவறாக வழி நடத்துகிறது. பொய்யே காங்கிரஸ் கட்சியை அழித்துவிடும். ரஃபேல் குறித்தும், ஹெச்.ஏ.எல் குறித்தும் ராகுல் காந்தி பொய் கூறினார். பொய்யின் பாதையில் மக்களை அழைத்து சென்று நாடாளுமன்றத்தை ஏமாற்ற முயற்சி செய்கிறார்கள்.
நாட்டின் முப்படைகளை பலப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம். போர்ச் சூழலை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தை பலப்படுத்தி வருகிறோம். போர் விமானங்களை வாங்கிய போது அதை அலட்சியம் செய்தது காங்கிரஸ். நாட்டின் முப்படைகளை பலப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். நாட்டின் படைகள் பலவீனமடைய வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.
நாட்டில் கலவரங்களை தூண்டிவிட காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது. எதிர்பார்த்த முடிவு வராததால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படும் என அராஜகத்தை பரப்ப காங்கிரஸ் முயற்சி செய்கிறது. எமர்ஜென்சி மூலம் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. அவசர நிலையின் போது ஊடகங்கள் முடக்கப்பட்டு, அரசியல் சாசனம் ஒடுக்கப்பட்டது. நேருவின் அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் ஏன் விலகினார் என்று கூற முடியுமா?.
ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தினார். நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்திய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். சிறுபிள்ளைத்தனம் என கருதி பொய்மையை கவனிக்காமல் விட முடியாது. மக்களவையில் ராகுல் காந்தி பேசியதை மக்கள் 100 ஆண்டுகள் ஆனாலும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.
கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை ராகுல் காந்தி புண்படுத்திவிட்டார். இந்து மதத்தின் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த சதி நடைபெறுகிறது. இந்துக்களை வன்முறையாளர்கள் என பேசுவது தான் உங்கள் கலாச்சாரமா?.. ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு காரணமே இந்து மதம் தான். இந்துக்களை அவமதிப்பதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை அவமதித்து, கேலி செய்கிறது காங்கிரஸ் கட்சி.
நாட்டை 2047ஆம் ஆண்டுக்குள் வல்லரசாக்க 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாள்களும் உழைக்கிறோம். 2014ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்த நாடு முன்னேறாது என்றுதான் மக்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிப் பேரை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம். மூன்றாவது முறையாக தேசத்தின் மக்கள் எங்களுக்கு வாக்களித்து எங்களை தேர்வு செய்திருக்கிறார்கள். ஏழைகள் நலனுக்காக நங்கள் செயல்பட்டதற்கு மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் பிதற்றுவது கண்கூடாகத் தெரிகிறது. மதச்சார்பின்மைக்கே மக்கள் வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களை ராகுல் காந்தி தூண்டிவிடுகிறார். வாக்கு வங்கி அரசியல் தேசத்தை சீர்குலைத்துவிட்டது. அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்கான வளர்ச்சி என்பதே எங்கள் கொள்கை
இரண்டு மணி நேரம் நீடித்த பிரதமர் மோடியின் உரைக்கு இடையே, எதிர்க்கட்சியினர் கடும் கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். நீட், மணிப்பூர் என எதிர்க்கட்சிகளின் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சியினர் அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கோபத்துடன் கூறினார். எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் சிறிதுநேரம் தனது உரையை மோடி நிறுத்தினார். பின்னர் எதிர்க்கட்சிகள் கண்டன முழக்கத்துக்கு இடையே பிரதமர் மோடி தொடர்ந்து பேசினார்.