திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டா மாறுதலுக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்த சம்பவம் அரசு அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நில பதிவுகள் துறையின் ஆவண காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள நில அளவை பிரிவில் சர்வேயர் பாக்யராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியைச் சேர்ந்த கணேஷ் குமார் என்பவர், தனிப்பட்டா வேண்டி இந்த அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக சர்வேயர் பாக்யராஜை அவர் சந்தித்துள்ளார்.
தனிப்பட்டாவிற்காக பாக்யராஜ், அவரது உதவியாளர் சதீஷ் என்பவர் மூலமாக 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் கடைசியாக 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வழங்குவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக கணேஷ்குமார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை பாக்யராஜின் உதவியாளர் சதீஷிடம் வழங்குமாறு போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதன்படி இன்று பணத்தை சதீஷிடம் கொடுக்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் பாக்யராஜையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து பாக்யராஜ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.