மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நேற்று பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து பேசிய சில கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நேற்று துவங்கியது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் விவகாரம், அக்னிவீர் திட்டம், மணிப்பூர் விவகாரம், பாஜக, ஆர்எஸ்எஸ் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆவேசமாக உரையாற்றினார்.
இதற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் பதலளித்ததும், ராகுல் காந்தி அதற்கு மீண்டும் பதிலளித்ததும் என மக்களவையில் நேற்றைய விவாதம் பெரும் கவனத்தை ஈர்த்தது.
குறிப்பாக, “சிவபெருமானின் அபயமுத்திரை அஹிம்சையை உணர்த்துகிறது. ஆனால் தங்களை ஹிந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் எப்போதும் வன்முறை, வெறுப்புணர்வு, பொய்கள் குறித்தே பேசிகின்றனர்” என்றார்.
இதையடுத்து பிரதமர் மோடி எழுந்து பேசுகையில், “ஒட்டுமொத்த ஹிந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என குறிப்பிடுவது மிகவும் தீவிரமான விஷயம்" என்றார்.
உடனே பிரதமருக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பாஜக, ஆர்எஸ்எஸ், மோடி ஒட்டுமொத்த ஹிந்து சமூக பிரதிநிதிகள் அல்ல" என மீண்டும் பதிலளித்தார்.
இவ்வாறு மக்களவையில் நேற்றைய விவாதம் அனல் பறந்தது. இந்நிலையில் மக்களவையில் ராகுல் காந்தி நேற்று பேசிய சில கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக பாஜக, ஆர்எஸ்எஸ் குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துகள் அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.