ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதியோர் ஓய்வூதியம் ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்பட்ட ‘என்டிஆர் பரோசா’ திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றார். அவர் பதவியேற்றதும் முதியோர் ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட ஐந்து முக்கியத் திட்டங்களில் கையெழுத்திட்டார்.
அதன்படி, 'என்டிஆர் பரோசா' ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மங்களகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பெனுமகா கிராமத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு ஓய்வூதியத் தொகையை வழங்கி, இத்திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசுகையில், "மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முதல் படி இது" என்றார்.
‘என்டிஆர் பரோசா’ திட்டத்தின்படி, 28 வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 65.31 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த ஓய்வூதியத் தொகை ரூ.4,408 கோடிக்கும் அதிகமாகும். இந்தத் திட்டம் முன்பு 'ஒய்எஸ்ஆர் பென்ஷன் கனுகா திட்டம்' என அழைக்கப்பட்டது. புதிய திட்டத்தின் படி, பயனாளிகள் கடந்த மே மாதம் முதல் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை பெறுவார்கள்.
அதன்படி, பயனாளிகளுக்கு நடப்பு ஜூலை மாதத்தில் 3 மாத நிலுவைத் தொகையும் சேர்த்து ரூ.7 ஆயிரம் கிடைக்கும். அடுத்த மாதம் முதல் மாதம்தோறும் ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரமும், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.