தீ விபத்தில் உயிரிழந்த மகள் நினைவாக 600 குழந்தைகளின் கல்விக்கு ஒளி பாய்ச்சிய காவல் அதிகாரி!


தீ விபத்தில் உயிரிழந்த மகள் ஹர்ஷாலி நினைவாக ஏழை குழந்தைகளுக்கு உதவிடும் லோகேசப்பா

தீ விபத்தில் உயிரிழந்த தனது மகளின் நினைவாக ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்காக காவல் துறை அதிகாரி ஒருவர் மேற்கொண்டு வரும் செயல்பாடு பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

வறுமை தின்னும் வாழ்க்கையில் இருந்து தப்பிக்கும் ஏழை, எளிய மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு தரவே போராடும் நிலையில் உள்ளனர். இதனால் கல்வி தர முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அப்படி தள்ளப்படும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் செய்திடும் உதவி பெங்களூரு மக்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.

பெங்களூரு சிவாஜி நகர் மகளிர் காவல் நிலையத்தில் உதவி எஸ்.ஐயாக பணியாற்றுபவர் லோகேசப்பா. இவர் ஏழை, எளிய குழந்தைகளுக்குப் புத்தகங்கள் மற்றும் படிக்கத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு படிப்பின் ஆர்வத்தைத் தூண்டி வருகிறார். இவரால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கல்வி வெளிச்சம் பெற்று வருகின்றனர்.

ஏஎஸ்ஐ லோகேசப்பா, பயன்பெற்ற குழந்தைகள்.

கடந்த 2019-ம் ஆண்டு லோகேசப்பா, கப்பன் பார்க் போக்குவரத்து நிலையத்தின் தலைமைக் காவலராகப் பணியில் இருந்தபோது மகளை இழந்தார். அவரது மகள் ஹர்ஷாலி தீவிபத்தில் உயிரிழந்தார். அவரது மகள் இறந்த பிறகு, லோகேசப்பா ஏழை குழந்தைகளுக்கு உதவ முடிவு செய்தார்.

மகளின் நினைவாக ஏழைக் குழந்தைகளுக்கு உதவத் தொடங்கினார். தனது 2 மாத சம்பளத்தை ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஆண்டுதோறும் வழங்கி வருகிறார்.

முதலில் ஒரு பள்ளியைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு தேவையான பொருட்களைக் கொடுத்து தனது பணியைத் துவக்கிய லோகேசப், தற்போது 6 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்து வருகிறார். சுமார் 600 குழந்தைகள் இவர் மூலம் தற்போது பயன் பெற்று வருகின்றனர்.

தீ விபத்தில் உயிரிழந்த மகள் ஹர்ஷாலி, உதவி எஸ்.ஐ லோகேசப்பா

பெங்களூருவில் ஒரு பள்ளி, மைசூருவில் ஒரு பள்ளி, ஹாசனில் நான்கு பள்ளிக் குழந்தைகள் தற்போது இவரது உதவியால் படித்து வருகின்றனர். பெங்களூரைச் சேர்ந்த 200 குழந்தைகள் உட்பட 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 600 குழந்தைகளுக்குப் பொருட்களை வழங்குகிறார். லோகேசப்பாவின் மனைவி கல்வித்துறையில் பணியாற்றி வந்தார். தற்போது அவர் தனது மகள் பெயரில் என்ஜிஓ ஒன்றை நடத்தி வருகிறார்.

இளமையில் வறுமையில் வாடிய ஏஎஸ்ஐ லோகேசப்பா, பியூசி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலும் பணமின்றி கல்விக்காக போராடினார். ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு ஏற்படும் நிதிப் பிரச்சினையை உணர்ந்த லோகேசப்பா, தன் மகள் இறந்ததை எண்ணி புலம்புவதற்குப் பதில் தனது மகளைப் போன்ற குழந்தைகள் கல்விக்காக உதவி செய்து வருகிறார். அவரின் சேவைக்கு நகர காவல் ஆணையர் பி. தயானந்த் உட்பட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

x