சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்


எடப்பாடி பழனிசாமி

சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், ‘சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் சுகாதாரமற்றக் குடிநீரால் 10 பேர் பலியானதாக செய்திகள் வந்துள்ள நிலையில், தலைநகர் சென்னையிலும் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

மரணம்

திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சென்னை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் சுகாதாரமற்று இருப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு அலட்சியப்போக்குடன் இருந்த திமுக அரசின் குடிநீர் வழங்கல் துறைக்கும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கும், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்திற்கும் எனது கடும் கண்டனம்.

மக்கள் வாழ்வியலுக்கு மிக அடிப்படை தேவையான குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதைக் கூட ஒரு அரசாலும் மாநகராட்சி நிர்வாகத்தாலும் உறுதிசெய்யமுடியவில்லை என்பது, நிர்வாகச் சீர்கேடு அரசு இயந்திரம் முழுவதும் புரையோடிப் போயுள்ளதைக் காட்டுகிறது.

தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சென்னையில், குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசையும், அதன் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

x