லடாக்கில் ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்ற 5 ராணுவ வீரர்கள், திடீர் வெள்ளத்தால் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனிடையே லடாக் அருகில் உள்ள தவ்லத் பேட் ஓல்டி பகுதியில் வெள்ளத்தின் போது ஆற்றைக் கடப்பதற்கான வழக்கமான ராணுவ பயிற்சிகள் நடைபெற்று வந்தது. இதற்காக டி-72 வகை ராணுவ பீரங்கியில் நேற்று மாலை 5 ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பீரங்கியுடன் 5 பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். உடனடியாக ராணுவ அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மீட்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு, இன்று காலை 5 ராணுவ வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை ராணுவமும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங்கும் உறுதி செய்துள்ளனர்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங், ’இந்திய ராணுவ வீரர்கள் 5 பேரின் உயிரிழப்பு மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. நாட்டின் பாதுகாப்புக்கான அவர்களின் பங்களிப்பை ஒருபோதும் மறக்க இயலாது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான சூழலில் நாடு அவர்கள் குடும்பத்தினருடன் நிற்கிறது’ என்று பதிவிட்டுள்ளார். உயிரிழந்த 5 பேரின் உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.