பீகாரில் 9 நாட்களில் 5 பாலங்கள் இடிந்ததால் பரபரப்பு... இரட்டை எஞ்சின் அரசை கிண்டல் செய்த தேஜஸ்வி யாதவ்!


தேஜஸ்வி யாதவ்

இரட்டை எஞ்சின் ஆட்சி நடைபெறும் பீகாரில் 9 நாட்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளளன ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் கிண்டல் செய்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் சமீப காலத்தில் பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகியுள்ளது. ஜூன் 18-ம் தேதி அராரியாவில் பக்ரா ஆற்றின் மீது ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இதற்குப் பிறகு, ஜூன் 22 அன்று, சிவனில் உள்ள கந்தக் ஆற்றின் மீது கட்டப்பட்ட பழமையான பாலம் இடிந்து விழுந்தது. ஒரு நாள் கழித்து, ஜூன் 23 அன்று, கிழக்கு சம்பாரனில் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலமும் இடிந்து விழுந்தது. அப்போது தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தியதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

இடிந்து விழுந்த பாலம்

ஜூன் 27 அன்று கிஷன்கஞ்சில் உள்ள கன்காய் மற்றும் மகாநந்தா நதிகளை இணைக்கும் ஒரு சிறிய துணை நதியின் மீது ஒரு பாலம் இடிந்து விழுந்தது. மதுபானி மாவட்டத்தின் ஜஞ்சர்பூரில் கட்டுமானப்பணியின் கீழ் இருந்த பாலம் இடிந்து விழுந்தது.

இடிந்து விழுந்த பாலம்

77 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் கடந்த 2 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் நிலையில் அதன் மதிப்பீடு சுமார் ரூ.3 கோடி. இது பிரதான் மந்திரி கிராமின் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் பீகாரின் ஊரக வளர்ச்சித் துறையால் கட்டப்பட்டது. பீகாரில் பாலங்கள் அடிக்கடி இடிந்து விழும் சம்பவங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளளன.

இந்த நிலையில் இரட்டை எஞ்சின் ஆட்சி நடைபெறும் பீகாரில் 9 நாட்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்," பீகாரில் இரட்டை எஞ்சின் அரசின் இரட்டை சக்தியால், 9 நாட்களில் பாலங்கள் மட்டுமே இடிந்து விழுந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான இரட்டை இயந்திரம் என்டிஏ கட்சிகளுடன் இணைந்து 99 நாட்களில் பாலம் இடிந்து விழுந்த பீகார் மக்களுக்கு மங்கள்ராஜ் நலனுக்காக வாழ்த்துக்களை அனுப்பியுள்ளது.

பாலங்கள் இடிந்து பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்த நிலையில், நேர்மையானவர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்பவர்கள் இதை ஊழல் என்று சொல்லாமல் கண்ணியம் என்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

இந்த நிலையில், பீகார் மாநிலம் முழுவதும் உள்ள பாலங்கள் மற்றும் மதகுகளின் நிலையை மதிப்பிடுவதற்காக மாநில அரசின் ஊரக விவகாரத் துறை இந்த வார தொடக்கத்தில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது. விரிவான அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

x