ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய வோடபோன் ஐடியா... பரிதவிப்பில் பயனாளர்கள்


வோடபோன் ஐடியா நிறுவனம்

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திருப்பதால் பயனாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

சமீபத்தில் மத்திய அரசு சார்பில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெற்றது. சுமார் 96 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே தொலைதொடர்பு நிறுவனங்கள் அலைபேசி ஏலத்தில் பங்கேற்றன. இதனிடையே விரைவில் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில் அடுத்தடுத்து தொலை தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வுகளை அறிவித்து வருகின்றன.

வோடபோன் ஐடியா நிறுவனம்

அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருந்தன. இதனால் வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் தற்போது வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது புதிய கட்டண உயர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி 28 நாட்களுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணமான 179 ரூபாயிலிருந்து 20 ரூபாய் உயர்த்தி 199 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 84 நாட்களுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 459 ரூபாயிலிருந்து 509 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 365 நாட்களுக்கான ரீசார்ஜ் கட்டணம் 1,799 ரூபாயிலிருந்து 1,999 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய ரீசார்ஜ் கட்டணங்கள்

தினசரி பயன்பாட்டிற்கான ஒரு ஜிபி டேட்டா 19 ரூபாயிலிருந்து 22 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 84 நாட்களுக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி மற்றும் 2 ஜிபி பயன்பாட்டிற்கான கட்டணங்கள் 140 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 56 நாட்களுக்கான ரீசார்ஜ் கட்டணங்கள் 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய போஸ்ட்பெய்ட் கட்டணங்கள்

இதே போல் போஸ்ட்பெய்ட் கட்டணங்களும் ஒரு மாதத்திற்கு 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பயனாளர்களின் திட்டத்திற்கு ஏற்ப உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

x