டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ள நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு இந்த போட்டி பார்படாஸ் நாட்டின் பிரிட்ஜ்டவுன் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இதுவரை இரண்டு அணிகளுமே ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை.
முக்கிய அணிகளான பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறின. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் அரை இறுதியில் வெளியேறியிருந்தன. ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரில் முதல் முறையாக அரை இறுதி போட்டிக்குத் தகுதி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
நசாவ் நகரில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கிரிக்கெட் ஸ்டேடியம் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. குறிப்பாக அதிக ரன்களைச் சேகரிக்க முடியாமல் முன்னணி அணிகளே திணறும் அளவிற்கு மைதானம் அமைக்கப்பட்டு இருந்ததாக, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி இன்றைய போட்டியில் பங்கேற்க உள்ளன. இந்த தொடரில் இந்த இரு அணிகளும் ஒரு முறை கூட தோல்வியைச் சந்திக்கவில்லை. 2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியா வென்று இருந்தது.
அதன் பின்னர் 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இலங்கை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதனால் இந்திய அணி இந்த போட்டியை வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விராத் கோலி பார்மில் இல்லாவிட்டாலும், ரோகித், சூரியகுமார், பண்ட், தூபே ஆகியோர் பேட்டிங்கில் கைகொடுத்து வருகின்றனர். பந்துவீச்சில், பும்ரா, அக்சார் பட்டேல், குல்தீப் ஆகியோர் அசரடித்து வருகின்றனர். அதனால் இந்திய அணி வலுவாகவே உள்ளது.
அதேசமயம் தென்னாப்பிரிக்காவும் எந்த வகையிலும் சளைத்த அணி அல்ல எனவும் ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 2007-ம் ஆண்டு முதல் தற்போது வரை அந்த அணியால் ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லை. முதல் முறையாக ஒரு நாள் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் அந்த அணி தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால் முழு திறனையும் பயன்படுத்தி அந்த அணி கோப்பையை வெல்ல முயற்சிக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அந்த அணியில் குவிண்டன் டீ காக் பார்மில் இல்லாவிட்டாலும், மார்க்ரம், ஹென்றிக்ஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், ரபாடா, ஷாம்சி ஆகியோர் பந்துவீச்சிலும் அசத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக இன்றைய போட்டி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மழை பெய்வதற்கான வாய்ப்பு 70 சதவீதம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள போதும், இன்றைய போட்டி நிச்சயம் நடைபெறும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.