அதிர்ச்சி... இந்திய பார்வையற்றோர் பெண்கள் கால்பந்து அணி கேப்டன் விபத்தில் பலி


மானாசா

கர்நாடகாவில் லாரி மீது வேன் மோதி 13 பேர் பலியான விபத்தில் இந்திய பார்வையற்றோர் பெண்கள் கால்பந்து அணி கேப்டன் மானாசாவும் உயிரிழந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

பலியானவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் உள்ள பத்ராவதி தாலுகாவில் உள்ள எம்மேஹட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள். இந்த கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் ஆதர்ஷ் (23) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு டெம்போ டிராவலர் ஒன்றை வாங்கியுள்ளார்.

எம்மேஹட்டி கிராமம்

இதனையடுத்து கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள சவதாட்டி மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள சோடே லட்சுமி ஆகிய கோயிலுக்கு தனது வாகனத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்துக்காக தனது பெற்றோர்கள் உடன் பாட்டி, மாமா என உறவினர்களையும் அழைத்துச் சென்றுள்ளார். ஜூன் 24-ம் தேதி எம்மேஹட்டியில் இருந்து மொத்தம் 17 பேர் கிளம்பியுள்ளனர்.

லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து

இந்த நிலையில் இன்று காலை இவர்கள் மீண்டும் ஊர் திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வகையில் கோயிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ​​ஹாவேரி மாவட்டம் குடேனஹள்ளி கிராஸில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதியது. இதில் வேனில் இருந்த 13 பேர் உயிரிழந்தனர்.

இதில் இந்திய பார்வையற்றோர் பெண்கள் கால்பந்து அணி கேப்டன் மானாசா(24) பலியானது தெரிய வந்துள்ளது. எம்எஸ்சி பட்டம் பெற்ற அவர், ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதற்காக பெங்களூருவில் படித்து வந்தார்.

மானாசா

அவருடன் வேனில் பயணம் செய்த பரசுராம் (45), பாக்யா (40), நாகேஷ் (50), விசாலாக்ஷி (50), சுபத்ரா பாய் (65), புண்யா (50), மஞ்சுளாபாய் (57), ஆதர்ஷ் (23), ரூபா (40), நீலம் (50). 4 மற்றும் 6 வயதுடைய இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர். காயமடைந்த அர்பிதா, அருணா, அன்னபூர்ணா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் இந்த விபத்து நடந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

x