காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பூலோ தேவி நேதம், இன்று நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடு பிரச்சினை குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன.
இந்நிலையில் மாநிலங்களவையில் நீட் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, காங்கிரஸ் உறுப்பினர் பூலோ தேவி நேதம், திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து உடனடியாக அங்கிருந்த சக எம்பி-க்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஆர்எம்எல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பூலோ தேவி நேதமிற்கு தலைசுற்றல் ஏற்பட்டு மயக்கமடைந்ததாக நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீட் பிரச்னை தொடர்பாக போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, காங்கிரஸ் பெண் எம்.பி. மயங்கி விழுந்த சம்பவம் சக எம்.பி-க்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து ஸ்ட்ரெச்சரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. தற்போது மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.