தஞ்சை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக கூறி, அதிமுக உறுப்பினர்கள் மேயரை ஒருமையில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். மாமன்ற கூட்டத்திற்கு கருப்பு சட்டைகள் அணிந்தும், கருப்பு துண்டுகள் அணிந்தும் அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் மணிகண்டன் பேசும் போது, ”கடந்த ஆண்டு கடன் இல்லாத மாநகராட்சி என பெருமை பேசி விளம்பரம் செய்தீர்கள். தற்போது மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் போட பணம் இல்லாமல் கடனில் தத்தளிக்கிறது. கடன் சுமைக்கு காரணம் என்ன? தஞ்சை மாநகராட்சியில் 32 கோடி ஊழல் நடந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வருகின்றன. இது குறித்து ஆணையர் பதிலளிக்க வேண்டும்” என்றார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஆணையர் மகேஸ்வரி, அடுத்த கூட்டத்தின் போது வரவு செலவு கணக்கு குறித்து விரிவாக தகவல் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் அதிமுகவினர் அதனை ஏற்க மறுத்து அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை இடைமறித்த மேயர் சண்.ராமநாதன், ஊழலுக்கு வித்திட்டது உங்கள் கட்சியின் ஜெயலலிதா தான் என கூறினார்.
இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன், முன்னாள் முதலமைச்சரை ஒருமையில் பேசக்கூடாது எனக்கூறி மேயர் ராமநாதனை ஒருமையில் பேசியதோடு, ஊழல் குறித்து பேச உங்களுக்கு தகுதி இல்லை எனவும் கடுமையாக வாக்குவாதம் செய்தார். இதையடுத்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர். இந்த வாக்குவாதம் காரணமாக சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.