மக்களவையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடு விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மைக் அணைக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
மக்களவை இன்று கூடியதும், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தை ஒத்தி வைத்து நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் கே.சி.வேணுகோபால் ஒத்திவைப்பு நோட்டீஸை அளித்தார்.
அவையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி, ராகுல் காந்தி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது மைக் அணைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தனது மைக் இணைப்பை மீண்டும் வழங்குமாறு, சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ராகுல் காந்தி கேட்டார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் கோரிக்கைக்கு பதிலளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, எம்பி-க்களின் மைக்-களை தான் அணைக்கவில்லை என்றும், அத்தகைய கட்டுப்பாடு தனக்கு இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
இன்றைய விவாதம் குடியரசுத் தலைவரின் உரை தொடர்பாக இருக்க வேண்டும் என்றும், மற்ற விஷயங்கள் சபையில் பதிவு செய்யப்படாது என்றும் ஓம்பிர்லா தொடர்ந்து கூறினார்.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், “நீட் தேர்வில் நரேந்திர மோடி எதுவும் பேசாமல் இருக்கும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவையில் இளைஞர்களின் குரலை எழுப்புகிறார். ஆனால், இவ்வளவு தீவிரமான பிரச்னையில் மைக்கை அணைப்பது போன்ற மலிவான செயல்களைச் செய்து இளைஞர்களின் குரலை நசுக்க சதி நடக்கிறது.” எனவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.