ரூ.975 கோடி வங்கிக்கடன் மோசடி... மும்பை நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை அதிரடி ஆய்வு; சொத்துக்கள் பறிமுதல்


வங்கிக்கடன் மோசடி - பிரிதிநிதித்துவ படம்

கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன்பெற்று, முறையாக அவற்றை திருப்பி செலுத்தாது மோசடி செய்யும் நிறுவனங்களின் வரிசையில், ரூ975 கோடி கடன் பெற்ற மும்பை நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை தனது அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

தொழில் விஸ்தீரணம், வளர்ச்சி ஆகியவற்றின் பெயரில் வங்கிகளில் கோடிகளில் கடன் வாங்கும் பெருநிறுவன முதலைகள், அவற்றை அடியோடு மோசடி செய்வது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அவர்களில் பலர் நாட்டை விட்டு தப்பியோடி, இந்திய விசாரணை அமைப்புகளை ஏய்த்து வருகின்றனர். மாணவர்களின் கல்விக் கடன், விவசாயிகளின் விவசாயக் கடன், சிறு குறு நிறுவனங்களுக்கான கடன்கள் வரை வங்கிகளில் பெறுவது இழுபறியாகும் சூழலில், கோடிகளில் மோசடி செய்யும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.

சிபிஐ விசாரணை

இவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் சாட்டை சுழற்றி வருகின்றன. தற்போது, ஜிபி குளோபல் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்துள்ள மந்தனா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனம், ரூ. 975.08 கோடி வங்கிக்கடன் மோசடி செய்ததாக, பாங்க் ஆஃப் பரோடா புகார் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் நிறுவனத்தின் இயக்குநர்கள் புருஷோத்தம் மந்தனா, மணீஷ் மந்தனா, பிஹாரிலால் மந்தனா உள்ளிட்ட பலருக்கு எதிராக பணமோசடி புகாரின் கீழ் சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

கடனாக பெற்ற தொகையை மோசடியான பரிவர்த்தனைகள் மூலம் தங்களுடைய தனிப்பட்ட சொத்து பெருக்கத்துக்காக திருப்பி விட்டதாகவும், இதற்கான கிரிமினல் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும் இவர்கள் மீது விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டி தங்களது அதிரடியை தொடங்கின. புகாருக்கு ஆளானவர்களுக்கு எதிராக கடந்த 2 தினங்களாக தொடர்ந்த அமலாக்கத்துறை ஆய்வில் 140க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள், ஐந்து லாக்கர்கள் மற்றும் ரு.5 கோடி மதிப்புள்ள பங்குகள் மற்றும் பத்திரங்கள் முடக்கப்பட்டுள்ளன.

அமலாக்கத்துறை

மேலும் லெக்ஸஸ், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட உயர் ரக கார்களும், ரோலக்ஸ், ஹுப்லாட் போன்ற பிரபல பிராண்டுகளின் பல கைக்கடிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மோசடி செய்வதற்கு ஏதுவாக பல்வேறு கற்பனையான நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. இந்த போலி நிறுவனங்கள் மூலமாக நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் கணக்குகளுக்கு மோசடி நிதி திருப்பி விடப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் மோசடியாளர்கள் வெளிநாட்டுக்குச் தப்பிச்செல்லா வண்ணம் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

x