எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவை, மாநிலங்களவையை முடக்கிய 'நீட்' தேர்வு முறைகேடு விவகாரம்


நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தால் மக்களவையில் அமளி

மக்களவை, மாநிலங்களவையில் நீட் விவகாரத்தை உடனடியாக விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டன.

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடு நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

காங்கிரஸ் எம்பி- கே.சி.வேணுகோபால், மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மானத்தை சமர்ப்பித்தார். நீட்-யுஜி மற்றும் யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவதில் வினாத்தாள் கசிவுகள் மற்றும் தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) தோல்வி குறித்து விவாதிக்க அவர் வலியுறுத்தினார்.

மக்களவை கூட்டம் தொடங்கியதும், நீட் முறைகேடு தொடர்பாக உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். ஆனால், சபாநாயகர் ஓம்பிர்லா, கேள்வி நேரம், ஒத்தி வைப்பு தீர்மானம், கவன ஈர்ப்பு தீர்மானம் போன்றவற்றுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் துவங்க உள்ளது எனத் தெரிவித்தார். இந்நிலையில் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நண்பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.

இதேபோல் மாநிலங்களவையிலும், நீட் தேர்வு குறித்து விவாதிக்க விதி 267ன் கீழ் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் நோட்டீஸ் வழங்கினார். ஆனால், அங்கும் அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதி வழங்காததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாநிலங்களவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

x