தலைநகர் டெல்லியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்ப அலை வீசி வந்தது. 42 டிகிரி வரையிலும் வெப்பம் சுட்டெரித்ததால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் நேற்று முதல் டெல்லியில் பரவலாக பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. புதுடெல்லி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக டெல்லி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, சிறு விபத்துகளும் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் கடும் சிரமத்திற்கிடையே அன்றாட பணிகளுக்காக சென்று வர வேண்டிய நிலை நீடித்து வருகிறது. தொடர் மழை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்கு உள்ளானதில் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் டெர்மினல் ஒன்றில் விமானத்திற்காக காத்திருந்த பயணிகளில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
நகரின் பல்வேறு பகுதிகளிலும் மாநில அரசு உரிய வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே இந்த அவல நிலைக்கு காரணம் என பாஜக குற்றம் சாட்டி வருகிறது. மாநில அரசை கண்டிக்கும் வகையில் தேங்கியுள்ள மழை நீரில் பாஜக கவுன்சிலர் ரவீந்திர சிங் படகு ஓட்டி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.