கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இன்று அதிகாலை மேற்கூரை இடிந்து விழுந்ததில் கார்கள் அப்பளம் போல நொறுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
டெல்லியில் கடந்த சில வாரங்களாக வெப்ப அலை வீசி வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடர்மழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் அங்கு நின்ற கார்கள் அப்பளம் போல நொறுங்கின.
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த டெல்லி தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் காருக்குள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் பலத்த காயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.