மாலத்தீவு அதிபருக்கு பில்லி சூனியம் வைத்தாரா அமைச்சர்? - காலநிலை அமைச்சர் கைதால் பரபரப்பு


மாலத்தீவு அதிபர் முகமது மொய்ஸு

மாலத்தீவுகள் தேசத்தின் அதிபர் முகமது முய்ஸுக்கு, பில்லி சூனியம் வைத்ததாக அந்நாட்டின் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலத்தீவின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சராக பாத்திமத் ஷம்னாஸ் அலி சலீம் என்பவர் உள்ளார். இவர் நாட்டின் அதிபர் முகமது மொய்ஸுக்கு எதிராக பில்லி சூனியம் உள்ளிட்ட பிளாக் மேஜிக் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் மாலேயில் பாத்திமத் ஷம்னாஸ் அலி சலீம் மற்றும் இருவரை அண்மையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

பில்லி சூனியம்

அமைச்சர் பாத்திமாத் கைது செய்யப்பட்டதற்கான முழு விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்படாத போதும், ஊடகங்களின் புலன் விசாரணையில் அதிபருக்கு எதிரான அமைச்சரின் பிளாக்மேஜிக் நடவடிக்கைகள் வெளிவந்தன. எனினும் இவை வெளிப்படையாக தெரிவிக்கப்படாததோடு, ஒரு வாரம் காவலிலும் அமைச்சர் பாத்திமாத் அடைக்கப்பட்டுள்ளார்.

"அதிபர் முகமது முய்ஸுவை சூனியம் செய்ததற்காக ஷம்னாஸ் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன" என்று உள்ளூர் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இவற்றை மாலத்தீவு போலீசார் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாலத்தீவு தண்டனைச் சட்டத்தின் கீழ், சூனியம் செய்வது கிரிமினல் குற்றமாகாது. ஆனால் அது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஆறு மாத சிறைத்தண்டனையை கொண்டுள்ளது. பில்லி சூனியம் குறித்தான புகார்களால் சாதாரண அடிதடி முதல் கொலைகள் வரை மாலத்தீவுகளில் அரங்கேறி இருக்கின்றன.

சூனியம்

சர்வதேச அளவில் கடும் காலநிலை நெருக்கடியில் உள்ள தேசம் மாலத்தீவு. ஐ.நா சுற்றுச்சூழல் வல்லுநர்கள் அறிவிப்பின்படி கடல் மட்டம் உயர்வதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் மாலதீவுகள் கிட்டத்தட்ட வசிக்க முடியாததாகிவிடும் என்ற எச்சரிக்கைக்கு ஆளாகி உள்ளது. எனவே இந்த தேசத்தில் காலநிலை அமைச்சரின் பங்கும் முக்கியமானது. ஆனால் அதிபருக்கு எதிரான புகாரில் காலநிலை அமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

x