நீட் தேர்வை முன்பு ஆதரித்தேன்; இப்போது எதிர்க்கிறேன் - டாக்டர் கிருஷ்ணசாமி தடாலடி


நீட் தேர்வை முன்பு ஆதரித்ததாகவும், ஆனால் தற்போது வணிக நோக்கில் நீட் தேர்வுகள் செயல்பட தொடங்கி உள்ளதால் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நீட் தேர்வுகளை முழுமையாக ஆதரித்ததோடு, அது பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருப்பதாகவும் தொடர்ந்து கூறி வந்தார். கடந்த மக்களவைத் தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அவர், அதிமுக கூட்டணியில் இணைந்து தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

நீட் தேர்வு

இந்த நிலையில் இன்று கோவையில் உள்ள அவரது இல்லத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நீட் தேர்வு காரணமாக கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் நிலை இருக்கிறது. நீட் தேர்வை முதலில் ஆதரித்தவன் நான். ஆனால் தற்போது நீட் தேர்வுகள் வணிக நோக்கில் செயல்பட தொடங்கியுள்ளது. ஆனால் மாணவர்களின் உண்மையான திறமையின் அடிப்படையில் தான் தேர்வுகள் செயல்பட வேண்டும். நீட் தேர்வில் மோசமான நிலை உருவாகியுள்ளது. நீட் பயிற்சி நிலையங்கள் விதிமுறைகள் மீறி செயல்படுகின்றன.” என்றார்.

கள்ளச்சாராயம்

மேலும், ”ஆங்கிலத்தில் இருந்த சட்டங்களின் பெயர்களை ஹிந்தியில் அனைவரும் உச்சரிக்க முடியாது. அனைத்து மொழி பேசும் மக்கள் பேசும் அளவிற்கு அதில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 63 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து உண்மை கண்டறிய அரசியல் கட்சிகள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் கோரிக்கை சட்டமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். அது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஒன்றே இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாகும்.” என்றார்.

x