குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றிய மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தை புறக்கணித்து, ஆம் ஆத்மி கட்சி எம்.பி-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி, ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 234 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி மற்றும் 71 அமைச்சர்கள் கடந்த 9ம் தேதி பதவியேற்றனர்.
இந்நிலையில் 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த 24ம் தேதி துவங்கியது. முதல் 2 நாள்கள் எம்.பி-க்கள் பதவியேற்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட்டு, ஓம் பிர்லா மீண்டும் சபாநாயகராக தேர்வானார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நரேந்திர மோடி அரசின் சாதனைகள், புதிய அரசின் கொள்கைகள் குறித்து குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
இந்நிலையில் டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி எம்.பி-க்கள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
அமலாக்கத் துறை, சிபிஐ-யை தவறாகப் பயன்படுத்தி, முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை மோடி அரசு கைது செய்து சதியை மேற்கொண்டுள்ளது. இதனை கண்டித்து எம்பி-க்கள் சஞ்சய் சிங், சந்தீப் பதக் ஆகியோர் தலைமையில் ஆம் ஆத்மி எம்.பி-க்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.