அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்... நலமுடன் வீடு திரும்பினார்!


மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் அதிஷி

டெல்லியில் குடிநீர் பிரச்னைக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி, உடல்நலம் பாதிக்கப்பட்ட, ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

டெல்லிக்கு யமுனை ஆற்றில் திறந்துவிட வேண்டிய நீர் பங்கீட்டை உறுதி செய்யாத, பாஜக ஆளும் ஹரியாணா மாநில அரசை கண்டித்து, ஆம் ஆத்மி அரசின் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 21ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.

தொடர்ந்து 5 நாட்கள் பட்டனிப் போராட்டம் நடத்திய அமைச்சர் அதிஷிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் டெல்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர் அதிஷி தனது போராட்டத்தை கைவிட்டார்.

இந்நிலையில் அவரது உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

டெல்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அதிஷியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.

இந்நிலையில், உடலம் நலம் முன்னேறியதைத் தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

x