கனமழை : மின்னல் தாக்கி 24 மணி நேரத்தில் 8 பேர் பலி!


மின்னல்

பீகாரில் மின்னல் தாக்கியதில் 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளளனர். அவர்களுக்கு முதல்வர் நிதிஷ் குமார் நிவாரணத்தொகையை அறிவித்துள்ளார்.

இந்தியாவின் வட மாநிலங்களில் பருவமழை இன்னும் தொடங்கத நிலையிலும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ராஜஸ்தான், குஜராத், டெல்லி மற்றும் கேரளாவில் கனமழை கொட்டுகிறது. தொடர்மழையால் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழை

இதன் காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ளன. ராஜஸ்தானின் தோல்பூர் மற்றும் குஜராத்தில் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதனால் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் பெய்த கனமழையால் வீடு இடிந்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், பீகாரில் மின்னல் தாக்கி 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகல்பூர் மற்றும் முங்கர் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு பேரும், ஜமுய், கிழக்கு சம்பாரன், மேற்கு சம்பாரன் மற்றும் அராரியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

மின்னல்

அவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், வானிலை மாற்றங்களின் போது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிதிஷ் குமார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சீரற்ற காலநிலையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், பேரிடர் மேலாண்மைத் துறையின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும். மோசமான வானிலையின் போது பொதுமக்கள் வீட்டிலேயே இருங்கள்" என்று கூறியுள்ளார். பீகாரில் மின்னல் தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு 4 லட்ச ரூபாய் நிவாரணத்தை முதல்வர் அலுவலகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

x