கர்நாடகாவில் மழை பெய்து கொண்டிருந்த போது, மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மின்னல் தாக்கத்தில் இருந்து நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த 3 மாநிலங்களிலும் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இடைவிடாமல் கனமழை தொடர்ந்து வருகிறது. கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, நீர்நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மழைக்காலங்களில் போது சிறுவர், சிறுமிகள் மொட்டை மாடியில் மழையில் நனைந்தபடி ரசித்து வீடியோவாக பதிவு செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் சித்தமார்க்கி மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக வரட்சி நிலவி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.
இதனால் நேற்று மொட்டை மாடி ஒன்றில் சிறுமி ஒருவர் மழையில் நனைந்தபடி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது வீட்டின் கூரை மீது மின்னல் ஒன்று தாக்கியது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் சிறுமி காயம் எதுவும் இன்றி உயிர் தப்பினார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வாளர்கள், மழை பெய்யும் போது வெட்டவெளிகள், மரங்களின் கீழ் அல்லது மொட்டைமாடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.