இ்ந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே. அத்வானிக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளார். 96 வயதான பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 1980-ம் ஆண்டு பாஜக தொடங்கப்பட்டதில் இருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்த அத்வானி வயது மூப்பால் வீட்டில் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். பாகிஸ்தானின் கராச்சி நகரில் பிறந்த அத்வானி, தனது 14 -ம் வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தார்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் இவரது குடும்பம் மும்பையில் குடியேறியது. மேலும் நீண்ட காலம் பாஜகவில் தலைவராக இருந்த அவர் சட்டப்படிப்பு படித்துள்ளார். வாஜ்பாய் பிரதமராக பணியாற்றிய காலக்கட்டத்தில் துணை பிரதமராக பதவி வகித்தார். அதே அரசில் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் அத்வானி பெயர் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டது. எனினும் அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
1992-ம் ஆண்டு டிசம்பவர் 6- ம் தேதி எல்.கே.அத்வானி தலைமையிலான ரத யாத்திரையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு அவருக்கு பத்மபூஷணும், சமீபத்தில் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது.